20 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட பெண்!
கிட்டத்தட்ட 20 வருட விசாரணைக்குப் பின்னர் பெண் ஒருவர் ஹெரோயின் கடத்திய வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.டி.பி.ரத்நாயக்க, பிரதிவாதிக்கு எதிரான குற்ற்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியதாக குறிப்பிட்டு பிரதிவாதியை விடுவித்தார்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பெண் வத்தளை, மாபோல பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடையவராவார். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து 234 கிராம் ஹெரோயின் இறக்குமதி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
குறித்த பெண்ணின் கணவருக்கு ஹெரோயின் தொடர்பான குற்றச்சாட்டில் இந்தியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள தனது கணவரை சிறையில் பார்த்துவிட்டு திரும்பி வரும் வழியில் ஹெரோயின் நிரப்பப்பட்ட மஞ்சள் டின்களை அவர் கொண்டு வந்துள்ளார்.
எனினும் அந்த டின்களில் ஹெரோயின் இருப்பது தனக்குத் தெரியாது என்றும், இது இலங்கையில் உள்ள உறவினர் ஒருவரிடம் ஒப்படைக்க யாரோ ஒருவரால் கொடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, அவர் மீதான வழக்கை நிரூபிக்க சரியான ஆதாரங்கள் புகார்தாரரால் சமர்ப்பிக்கப்படாததால், இந்த மாதம் 26ஆம் திகஹெதி அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.