கிரிந்தவில் போதைப்பொருளுடன் கைதானவர்கள் தடுப்பு காவலில்
கிரிந்த கடற்கரை பகுதியில் பெருமளவான 'ஐஸ்' ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
சந்தேக நபர்கள் நேற்று (12) மாலை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிரிந்த பகுதியில் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 345 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் நேற்று ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட போதைப்பொருள், டுபாயில் பதுங்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான, திக்கவெல்ல 'ரன் மல்லி' என்பவருக்கு சொந்தமானது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.