யாழில் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்வில் அதிரடி காட்டிய பெண் ; கூட்டத்தை பரபரப்பாக்கிய சம்பவம்
யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் நடைபெற்ற பெண்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின் இறுதிக் கட்டத்தில், அங்கு கலந்துகொண்ட பெண் ஒருவர் தனது பிரச்சினைகளை முன்வைத்து உரையாற்றியதால் சிறிது நேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சாவித்திரி போல் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர், நாடளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நீண்ட உரைகள்
நிகழ்வின்போது பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து நீண்ட நேரம் உரைகள் இடம்பெற்றன.
இந்நிலையில், நிகழ்வு நிறைவடையும் வேளையில் நன்றி உரை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சங்கானை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் எழுந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“பெண்களுடன் கலந்துரையாடல் என்று கூறி நிகழ்வு நடத்தப்பட்டாலும், இங்கு வந்த பெண்களின் பிரச்சினைகளை யாரும் கேட்கவில்லை. அனைவரும் பேசிவிட்டு செல்கிறார்கள்” என அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், தாம் நடத்தி வரும் நாய்கள் காப்பகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், தமக்கு மலசலகூட வசதி இல்லாத நிலையில் அதனை அமைப்பதற்கான அனுமதியையும் பெற முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தினாலும் சில அதிகாரிகளினாலும் தாம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த நிகழ்வுக்காக வேறு பகுதியிலிருந்து வந்ததாக தெரிவித்த அவர், பெண் அமைச்சர் கலந்துகொள்வதாக அறிந்ததால் தனது பிரச்சினைக்கு நீதி கோருவதற்காகவே கூட்டத்தில் பங்கேற்றதாக கூறினார்.
இதன்போது அங்கிருந்த சில தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, அடுத்த நிகழ்விற்குச் செல்லத் தயாராக இருந்த அமைச்சர் சாவித்திரி போல் ராஜ் நேரடியாக அந்த பெண்ணை சந்தித்து அவரது பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
சம்பந்தப்பட்ட விடயங்களை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும், அவற்றை ஆராய்ந்து தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அத்துடன், இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பவானந்த ராஜாவையும் சந்தித்து கலந்துரையாடுமாறு அமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.