லண்டன் மருத்துவர் என நம்பி பெரும் தொகையை இழந்த பெண்; தமிழர் பகுதியில் சம்பவம்!
மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான 'வெளிநாட்டு வைத்தியர்' ஒருவரின் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண் ஒருவரின் முகநூலில், லண்டனைச் சேர்ந்த 'டான்' எனும் பெயருடைய வெள்ளைக்கார வைத்தியர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி நண்பராக இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் முகநூல் வாயிலாக உரையாடி வந்துள்ளனர்.

சர்வதேசப் பொதி விநியோக நிறுவனம் அழைப்பு
இதனையடுத்து, கடந்த 16ஆம் திகதி அப்பெண்ணின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தாம் கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் இயங்கி வரும் சர்வதேசப் பொதி விநியோக நிறுவனம் ஒன்றிலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளார்.
லண்டனைச் சேர்ந்த வைத்தியர் 'டான்' பல இலட்சம் ரூபாய் பெறுமதியான விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதனைச் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிப்பதற்கு (Clearance) 87,000 ரூபாய் பணத்தைக் குறிப்பிட்ட வங்கிவழியே செலுத்துமாறும் கோரியுள்ளார்.
அதனை உண்மையென நம்பிய அப்பெண், 17ஆம் திகதி உடனடியாக 87,000 ரூபாயை அனுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பொதியை விடுவிக்க மேலும் 3 இலட்சம் ரூபாய் தேவை எனக் கூறப்படவே, அதனையும் வைப்புச் செய்துள்ளார். பின்னரும் பணம் கோரப்பட்டதால், அப்பெண்ணின் தாயார் மேலும் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக மோசடி கும்பல் மேலும் ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டதுடன், இறுதியாக "இன்னும் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே பார்சல் விடுவிக்கப்படும்" என்று கூறியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அப்பெண், "இனிமேல் பணம் தர முடியாது" எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த மோசடி கும்பலைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது, தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந் நிலையில் முகநூல் வாயிலாக இயங்கும் இணையவழி மோசடி கும்பல்களிடம் பலர் பல இலட்சம் ரூபாய் பணத்தைப் பறப்கொடுத்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், அறிமுகமில்லாத முகநூல் நபர்களிடம் பொதுமக்கள் மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.