களவாடிய தொலைபேசியை காதலனுக்கு பரிசளித்த யுவதி!
பெறுமதிமிக்க கைத்தொலைபேசியொன்றை களவாடி தனது காதலனுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் சந்தேகநபர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா நீதிமன்ற களஞ்சியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க தொலைபேசி ஒன்று காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைத்துள்ளது.
களஞ்சியசாலையில் பணிபுரிந்த காதலி
அந்த முறைப்பாட்டிற்கு அமைய தொலைபேசி தரவுகளை சோதனையிட்ட பொலிஸாரால் காணாமல் போன தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருக்கும் நபரை கண்டுபிடித்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நீதிமன்ற களஞ்சியசாலையில் பணிபுரிந்த அவருடைய காதலி அதனை பரிசாக வழங்கியமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை (30) அன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்படி கைதான யுவதியை ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.