கொழும்பில் போலி விமானப்படை சீருடையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கைது
விமானி எனப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 44 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணைகளின்போது, சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணியாற்றுவதாகக் கூறி, தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அவர்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் தெரிவித்து பணம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனை நம்பிய பேருந்து உரிமையாளர் ஒருவர் தனது பேருந்தை விற்று கிடைத்த 60 இலட்சம் ரூபாய் பணத்தை சந்தேகநபரிடம் வழங்கியுள்ளார்.
குறித்த பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடை அணிந்து வந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், தான் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறி பேருந்து உரிமையாளரைத் தவிர்த்து வந்த நிலையில், அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் குருநாகல் பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இதற்கு முன்னரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து 22 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.