ராஜபக்ச அரசாங்கத்திற்கு தலைவலியாகும் விமல் வீரவன்ச!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தரப்பினர் புதிய எதிர்க்கட்சியொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தினது பெரும்பான்மை பலத்தை இழக்கச் செய்வதே தமது நோக்கம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நேற்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாடாளுமன்றில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவவதாகவும், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் தாமும் தற்பொழுது நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
தாம் இதுவரையில் எதிர்க்கட்சியின் உறுப்பினராக செயற்படவில்லை. எதிர்க்கட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் அங்கம் வகின்றது.
அதேசமயம் எதிர்க்கட்சியில் புதிய பிரிவு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சில தரப்புக்கள் இதற்கு ஆதரவினை அளிக்க இணங்கியுள்ளதாகவும் விமல் வீரவன்ச இதன்போது மேலும் தெரிவித்தார்.