5 ஆம் திகதிக்கு பின்னர் தடையில்லா மின்சாரம் அமுல்படுத்தப்படுமா ?
மின்சார விநியோகத்தை தொடர்ந்து வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்த மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே, மார்ச் 5 ஆம் திகதிக்கு பின்னர் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மீண்டும் உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் , "எங்களிடம் போதுமான அளவு அனல் மின் நிலையங்கள் உள்ளன.
ஆனால் மின்சார உற்பத்திக்கு போதுமான எரிபொருள் இருப்புகளைப் பெறுவதில் எங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது" என்று குறிப்பிட்டார்.
இதன்படி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான மேலதிக எரிபொருள் தொகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தேவையான எரிபொருள் தொகையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவோ அல்லது இலங்கை மின்சார சபைக்கு நேரடியாக பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில் அனைத்து அனல் மின் நிலையங்களின் செயல்பாட்டுக்கும் எங்களுக்கு 30,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் உலை எண்ணெய் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
எனினும், நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள வரட்சியால் நீர் மின் நிலையங்கள் செயற்பட முடியாமல் காணப்படுவதாகவும் எரிபொருள் விநியோகம் தொடர்ந்து குறைவாக இருப்பதால், மின்சார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சிறிது நேரம் மின்வெட்டு விதிக்க வேண்டியுள்ளது என இலங்கை மின்சாரசபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.