ரணில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவாரா? கே.டி. லால்காந்த விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார் எனும் நம்பிக்கையை அவரது சட்டத்தரணிகள் அழித்துவிட்டார்கள் என விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
நேற்று (27) கண்டியில் நடைபெற்ற இணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மருத்துவ நிலைகளை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணிகள் அவரை பிணையில் விடுவிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் அவரை மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாத நிலைக்கு உட்படுத்தியுள்ளது.
இதன்மூலம், ரணில் தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையில் இருக்க வேண்டிய நிலைமையில் உள்ளார் என்பதைக் எடுத்துக்காட்டுகிறது.
அதனால், கூட்டு எதிர்க்கட்சிக்கு வேறொரு தலைவரை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், இவ்வளவு கடுமையான மருத்துவ நிலைமைகளில் அவர் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமா ? என்பது கேள்விக்குறியான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.