100 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீங்குமா? கலந்துரையாடல்கள் ஆரம்பம்!
நூற்றுக்கும் மேற்பட்ட பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் கைத்தொழில் அமைச்சு என்பன கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.
தற்போதைய பேச்சுவார்த்தையின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த நான்கு மாதங்களில் நீக்கப்படும் என்றும், ஆனால் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் அப்படியே இருக்கும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இறக்குமதியாளர்கள் தொடர் கோரிக்கை
கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், அது எவ்வகையான பொருட்கள் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குமாறு இறக்குமதியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டில் நிலவும் டொலர் கையிருப்பு பிரச்சினையால் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் சுமார் நானூறு பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மேலும் பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், Chocolate, வாசனை திரவியங்கள், இறப்பர் சார்ந்த பொருட்கள், மின் சாதனங்கள், மொபைல் போன்கள் போன்றவற்றுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.