ஊருக்குள் புகுந்த காட்டுயானை ; சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகில் இரவு நேரத்தில் புகுந்த காட்டு யானையொன்று, செல்வா மைதானத்தின் வேலிகளை சேதப்படுத்தியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடி யானையை காட்டுப்பகுதிக்கு விரட்டியுள்ளனர்.

மனித–யானை மோதல்
இதன்போது நற்பிட்டிமுனை கிட்டங்கி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வீதியைக் கடக்க முயன்ற குறித்த யானை, தோட்டப் பணிக்காக சைக்கிளில் சென்ற சிறுவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த சிறுவன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மற்றுமொரு காட்டு யானையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்பாக காட்டுப்பகுதிக்கு விரட்டியுள்ளனர்.
அறுவடைப் பருவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வயல்களில் எஞ்சியுள்ள வைக்கோலுக்கு தீ வைப்பதால் ஏற்படும் புகை மற்றும் காட்டுப்பகுதிகளில் நிலவும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக யானைகள் குடியிருப்புகளை நோக்கி வருவதாக சூழலியலாளர்களும் விவசாய நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் மனித–யானை மோதலைத் தடுக்க யானை வேலிகளை அமைப்பதுடன், நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.