சம்மாந்துறையில் நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிரிழந்த காட்டு யானை
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானை கடந்த 24ஆம் திகதி உயிரிழந்த நிலையில், அதன் உடல் திங்கட்கிழமை (26) அதே வயல் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
சுமார் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட ஆண் காட்டு யானை, நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதனைக் காப்பாற்றுவதற்காக கால்நடை மருத்துவக் குழுவினரும் வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து சிகிச்சைகளை முன்னெடுத்திருந்தனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.
இன்று யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது, சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபாவின் வழிகாட்டுதலில் கிராம சேவகர் ஏ.பி.எம். றமிஸ் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அவ்விடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.