புட்டு கேட்ட கணவனை அடித்து கொன்ற மனைவி ; பொலிஸாரின் விசாரணைகளில் பல தகவல்கள்
மட்டக்களப்பு வாழைச் சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தாக்குதலில் 46 வயது கணவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணவரின் நீண்டகால துன்புறுத்தல்களே, சம்பந்தப்பட்ட பெண்ணை பொறுமை இழந்து அந்த கடுமையான செயலில் ஈடுபடச் செய்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
குறித்த பெண்ணின் கணவர் மதுபோதைக்கு அடிமையாக இருந்து, தினந்தோறும் மனைவியை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அவர் தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாகியுள்ளதாகவும், கடந்த காலத்தில் ஏற்பட்ட தாக்குதல்களால் காது கேளாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் இடம்பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, கணவரால் துன்புறுத்தப்படுவதாக பெண் பொலிஸாரிடம் முறையிட்டிருந்ததாகவும், உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த முறை கணவரை கொலை செய்துவிட்டே வருவேன் என அவர் மன வேதனையுடன் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக வெளிப்பார்வைக்கு அமைதியான நபராகவே கணவர் காணப்பட்டிருந்தாலும், மதுபோதை அவரை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் மூலம், குடும்பத்துக்குள் மறைந்திருக்கும் வன்முறைகள் எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதும் வெளிப்படுகிறது.
இந்த சம்பவம், தனிப்பட்ட குற்றச்செயலாக மட்டுமல்லாமல், குடும்ப வன்முறை, மதுபோதையின் தீவிர விளைவுகள் மற்றும் கணவன்–மனைவி உறவுகளில் பரஸ்பர புரிந்துணர்வு இல்லாமை போன்ற சமூக பிரச்சினைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
கணவன்–மனைவி இடையே எழும் கருத்து வேறுபாடுகள், வெளியில் அல்லாது குடும்ப எல்லைக்குள் கலந்துரையாடலின் மூலம் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டியவை என சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் விட்டுக்கொடுப்பு இல்லாதபோது, அதன் பாதிப்பு இறுதியில் பிள்ளைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றும் நிலை உருவாகும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில், நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பம் இன்று தந்தையற்ற நிலைக்கும், தாயை சிறையில் காணும் துயர நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம், குடும்ப வன்முறையும் மதுபோதையும் ஒரு குடும்பத்தின் முழு எதிர்காலத்தையே சிதைக்கக் கூடியது என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.