பிரியாணியில் 20 தூக்க மாத்திரை ; கணவனின் கதையை முடித்து மனைவி ஆடிய நாடகம்
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலுவுரு கிராமத்தை சேர்ந்த ஒருவரின் மனைவி தகாத உறவில் இருந்துள்ளார்.
இதற்கு தடையாக இருந்த கணவனை கொல்ல திட்டமிட்ட குறித்த பெண் இரவு உணவாகப் பிரியாணியைத் தயார் செய்து, அதில் 20 தூக்க மாத்திரைகளை கலந்து தனது கணவருக்குக் கொடுத்துள்ளார்.

மனைவியின் நாடகம்
பிரியாணி சாப்பிட்ட கணவன் மயக்கமடைந்ததும்,குறித்த பெண் தனது காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து அவரைக் கொலை செய்தனர்.
கொலையைச் செய்த பிறகு, தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் மனைவி நாடகமாடியுள்ளார்.
உயிரிழந்த நபரின் உடலில் காயங்கள் மற்றும் இரத்தக் கறைகளைக் கண்ட உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு பொலிஸாரிடம் புகார் அளித்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் மூச்சுத்திணறச் செய்து கொல்லப்பட்டது உறுதியானது.
மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது காதலன் கோபி ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.