விஜயின் வெற்றிக்கு பின்னால் இருந்த மாஸ்டர் மைண்ட் ; யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி
தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பின்னால் முக்கிய பங்கு வகித்தவர் அரசியல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமி எனக் கூறப்படுகிறது.
விஜய் அரசியல் கட்சி தொடங்கும் முன்பே அவருடன் நெருக்கமாக பணியாற்றத் தொடங்கிய ஜான் ஆரோக்கியசாமி, விஜயின் தனிப்பட்ட அரசியல் வியூக ஆலோசகராக செயல்பட்டார்.
விஜய் எப்படி பேச வேண்டும், எந்த விஷயங்களை முன்னிறுத்த வேண்டும், யாரை அரசியல் எதிரியாக சித்தரிக்க வேண்டும் என்பதிலிருந்து அவரது உடல்மொழி வரை அனைத்திலும் ஜான் முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, “திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி” என்ற விஜயின் அரசியல் நிலைப்பாட்டை வடிவமைத்ததில் ஜான் ஆரோக்கியசாமியின் வியூகமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த அணுகுமுறை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்ததாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
விஜயை இரண்டு தொகுதிகளில் போட்டியிடச் செய்த முடிவும் ஜான் ஆரோக்கியசாமியின் முக்கிய அரசியல் திட்டங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
தேர்தல் முழுவதும் விஜயின் பிரசார நடைமுறை, பொதுக்கூட்ட உரைகள் மற்றும் மக்களிடம் செல்வதற்கான அணுகுமுறைகளில் ஜானின் தாக்கம் தெளிவாக இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஜான் ஆரோக்கியசாமியை விஜயிடமிருந்து பிரிக்க பல்வேறு தரப்புகளில் முயற்சிகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்தபோதிலும், அவற்றை பொருட்படுத்தாமல் விஜயின் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு ஜான் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
அரசியல் வியூக நிபுணராக ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பல முக்கிய தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் “மாற்றம், முன்னேற்றம், அன்புமணி” என்ற பிரசார முழக்கத்தை வடிவமைத்ததன் மூலம் அவர் கவனம் பெற்றார்.
பின்னர், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியதுடன், 2021 தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்காகவும் பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில், விஜயின் அரசியல் வெற்றிக்கு பின்னால் செயல்பட்ட முக்கிய மூளையாக ஜான் ஆரோக்கியசாமி தற்போது அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார்.