“வெள்ளை உடை… கறுப்பு நோக்கம்!” ; கொழும்பில் இளைஞர்களின் நூதனப் போராட்டம்
இலங்கையின் பழைய அரசியல் கலாசாரத்திற்கு எதிராக, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
புதிய சிறகுகள் அமைப்பு மற்றும் பல இளைஞர் குழுக்களால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“வெள்ளை உடையில் வந்து, கறுப்பு நோக்கத்துடன் செயற்படுபவர்கள்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பொதுமக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் இரட்டை நிலைப்பாடுகள் குறித்து ஏற்பாட்டாளர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
ஊழல், இனவாதம், மதத் தீவிரவாதம், திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக மதம் பயன்படுத்தப்படுதல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இளைஞர் செயற்பாட்டாளர்கள் வீதியோர நாடகமொன்றையும் நடத்தியதுடன், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும், ஊழல் நிறைந்ததாகத் தாங்கள் வர்ணிக்கும் பழைய அரசியல் கலாசாரம் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் காட்சிப்படுத்தினர்


