கிரிகெட் ரசிகர்களுக்கு வந்த சோதனை! விசில் கொண்டு செல்ல தடை
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் இரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நிலையில் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
மைதானத்துக்குள் பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல வழக்கம் போல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பொதுவாக குடிநீர் போத்தல்கள்,பவர் பேங்க் உள்ளிட்டவைகளை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுவது வழக்கம்.

சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை
தற்போது முதல் முறையாக விசில்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாக, இப்போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள் என அந்த கட்சியின் பிரமுகர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
விளையாட்டு மைதானம் என்பது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடம். அங்கு விசிலுக்குத் தடை விதிப்பது என்பது, மக்களின் கொண்டாட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.