பல கோடிகளை கொட்டினாலும் பெண்கள் செல்ல முடியாத இடங்கள் எது என தெரியுமா?
தற்போதைய நவீன காலத்திலும் கூட உலகில் சில இடங்களுக்கு பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நான்கு இடங்கள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.
பர்னிங் ட்ரீ கிளப், அமெரிக்கா
அமெரிக்காவின் மேரிலாந்தின் பெதஸ்தாவில் பர்னிங் ட்ரீ கிளப்(Burning Tree Club) அமைந்துள்ளது. இது முழுக்க முழுக்க ஆண்களின் கோல்ஃப் கிளப் ஆகும். இந்த கிளப் 1922 இல் திறக்கப்பட்டது. இந்த கிளப்பில் பெண்கள் உறுப்பினர்களாகவோ அல்லது மைதானத்தில் விளையாடவோ அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கையை மாற்றுவது குறித்து அவ்வப்போது விவாதங்கள் நடந்தாலும், அது மாறாமல் உள்ளது.
மவுண்ட் ஓமைன் - ஜப்பான்
ஜப்பானின் நாரா மாகாணத்தில் அமைந்துள்ள மவுண்ட் ஓமைன்(Mount Omine), பெண்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ள புனிதத் தலமாகும். ஜப்பானிய மலை துறவி பாரம்பரியமான ஷுகெண்டோவில் துறவற நடைமுறைகளுக்கான பயிற்சி மைதானமாக இந்த மலை கருதப்படுகிறது. அதன் ஆன்மீக புனிதத்தன்மையைப் பாதுகாக்க பெண்கள் மலையில் ஏறவோ அல்லது சில பகுதிகளுக்குள் நுழையவோ அனுமதிக்கப்படுவதில்லை.
மவுண்ட் அதோஸ், கிரீஸ்
மவுண்ட் அதோஸ்(Mount Athos) என்பது கிரேக்கத்தில் உள்ள ஒரு தன்னாட்சிப் பகுதியாகும். இது ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத்தின் புனிதமான தலங்களில் ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் மவுண்ட் அதோஸில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு துறவற வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் ஆன்மீக நோக்கங்களிலிருந்து கவனச்சிதறலைத் தவிர்ப்பதற்கும் பெண்கள் நுழைய தடை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒகினோஷிமா தீவு, ஜப்பான்
ஜப்பான் கடலில் அமைந்துள்ள ஒகினோஷிமா தீவு, அதன் மத முக்கியத்துவத்திற்காக அறியப்படும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாகும். பழங்கால ஷின்டோ மரபுகள் காரணமாக பெண்கள் தீவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. புனிதமாகக் கருதப்படும் இந்த தீவின் தூய்மையைப் பராமரிக்க இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.