ஸ்ரீலங்கன் விமான சேவை விற்பனைக்கு காரணம் என்ன?
ஸ்ரீலங்கன் விமானசேவையை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2015 – 2019 வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் விமானசேவையைத் தனியார்துறையிடம் வழங்குவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ நாம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போது அதனை விற்பனை செய்யும் அளவிற்கு நட்டமேற்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (8 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒருவருடகாலம் பூர்த்தியடைந்தபோது அப்போதைய நிலைவரங்களின் அடிப்படையில் நாம் ‘சேர் ஃபெயில்’ என்ற வாசகத்தைக் கூறினோம். அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.
அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று இரண்டாவது வருடமும் நிறைவடையவுள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலைகளின் போது அவருக்கு என்ன கூறுவதென்று நாட்டுமக்களே தீர்மானிக்கவேண்டும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் விவசாயிகள் பெரும் எண்ணிக்கையானோர் எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் திரள்வார்கள்.
இயலுமானால் அவர்களுக்கு எதிராக அடக்குமுறையைப் பிரயோகித்துப்பார்க்குமாறு ஜனாதிபதிக்கு சவால்விடுகின்றோம். மாறாக சேதனப்பசளையைப் பயன்படுத்துமாறு விவசாயிகளின் கழுத்தைப்பிடித்து தன்னால் கூறமுடியும் என்று ஜனாதிபதி அவரது உரையில் சுட்டிக்காட்டுகின்றார். அவர் கடந்த காலத்தைப்போன்று தற்போதும் மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே செயற்படுகின்றார்கள்.
மேலும் ஸ்ரீலங்கன் விமானசேவையை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கன் விமானசேவை நட்டமடைந்திருப்பதற்கான காரணம் என்ன? அச்சேவையின் ‘சார்ட்டர்’ விமானத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கென்ய பயணத்திற்கு உரிய கொடுப்பனவு செலுத்தப்பட்டதா?.
கடந்த 2015 – 2019 வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் விமானசேவையைத் தனியார்துறையிடம் வழங்குவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ நாம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போது அதனை விற்பனைசெய்யும் அளவிற்கு நட்டமேற்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வியெழுப்ப விரும்புகின்றோம்.