பாசத்திற்கு விலையேது? உயிரிழந்த தம்பியை விழாவுக்கு அழைத்து வந்த சகோதரி!
தனது மகளின் காதணி விழாவில், இறந்த தனது தம்பியின் சிலையை வடித்து, அதன் மடியில் குழந்தைகளை அமரவைத்து தனது தம்பியின் ‘தாய்மாமன் கனவை’ அவரது சகோதரி பிரியதர்ஷினி நிறைவேற்றியுள்ளமை பலரையும் நெகிழவைத்துள்ளது .
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி-பசுங்கிளி தம்பதியரின் மகன் பாண்டித்துரை. இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார்.
உயிரிழந்த பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகாஸ்ரீ. மகன் மோனேஷ்குமரன் ஆகியோர் மீது பாண்டித்துரை அளவு கடந்த பாசம் வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் தனது அக்கா குழந்தைகளுக்கு தனது மடியின் வைத்து காதணி விழா நடத்த வேண்டும் என அடிக்கடி கூறிவந்துள்ளார். காதணி விழாவிற்கு ஏற்பாடுகள் செய்த நிலையில் பாண்டித்துரை இறந்தமை குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஒட்டன்சத்திரத்தில் குழந்தைகளின் காதணிவிழா நடைபெற்றது. தனது தம்பியின் ஆசையை பூர்த்திசெய்யும் வகையில், பாண்டித்துரையின் உருவத்தை சிலிக்கன் மூலம் சிலையாக செய்த சகோதரி , தம்பியை காதணிவிழாவில் பங்கேற்க செய்தார் .
தத்ரூபமாக செய்யப்பட்ட பாண்டித்துரை வேட்டி, சட்டை, துண்டு அணிந்து சேரில் சிலையாக அமர வைக்கப்பட்டிருந்தார். பாண்டித்துரை சிலை வடிவில் தாய்மாமனாக வீற்றிருக்க சிலையின் மடியில் அமரவைத்து தனது குழந்தைகளுக்கு காதணிவிழா நடத்தினார் அவரது பாசமான சகோதரி பிரியதர்ஷினி.
அதோடு சாரட் பூட்டிய வண்டி ஒன்றில் சிலையை அமரவைத்து ஊர்வலமாக தாய்மாமன் சீர்வரிசையை கொண்டுவந்தனர். இது குறித்து பாண்டித்துரையின் தாயார் கூறுகையில்,
”அக்கா குழந்தைகள் மீது எனது மகன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். தனது மடியில் வைத்து காதணி விழா நடைபெறும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த போது தான் எதிர்பாரதவிதமாக விபத்தில் உயிரிழந்தான். அவனது கனவை நனவாக்கும் வகையில், அவனது விருப்பத்தை தற்போது நிறைவேற்றியுள்ளோம். இதற்காக பெங்களூருவில் சிலை செய்பவரிடம் சொல்லி பாண்டித்துரை சிலையை ரூ.5 லட்சம் செலவில் செய்து வாங்கினோம்.
இதன்மூலம் என்னுடைய மகன் காதணி விழாவில் நேரில் கலந்துகொண்ட மகிழ்ச்சி தாய், தந்தையான எங்களுக்கும் எனது மகளுக்கும் கிடைத்தது என ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.
அதேவேளை விழாவிற்கு வந்த உறவினர்கள், நண்பர்களை பாசமான அந்த சகோதரியின் செயல் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒட்டன்சத்திரத்தில் நடந்த இந்த வினோத காதணிவிழா விழாவிற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாகியதோடு, தாய்மாமன் உறவை வலுப்படுத்தியாகவும் இருந்ததாக கூறிச்சென்றனர்.


