ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி!
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்திலிருந்து இலங்கை சென்ற பெண்ணொருவர் கணவரால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது முன்னாள் கணவரால் கழுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் சகோதரி மற்றும் நண்பி ஆகியோரையும் கத்தியால் வெட்டிவிட்டு, தனது கழுத்தை அறுத்துக்கொண்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றபோதும் தாக்குதலாளி தப்பிவிட்டார்.
இந்தச் சம்பவம் வெலிவெரியா பிரதேசத்தில் கடந்த 25 ஆம் திகதி – ஞாயிற்றுக்கிழமை – இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர் அப்ஸரா விமலசிறி என்ற 33 வயதானவர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முதுமாணிப் படிப்பையும் நிறைவு செய்துகொண்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்குச் சென்ற அப்ஸரா, வெலிங்டன் விக்டோரிய பல்கலைக்கழகத்தில் Applied Linguistics துறையில் கலாநிதிப் பட்டத்துக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்திருந்தார்.
பெண்களின் ஆளுமை மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடுகொண்ட அப்ஸரா, நியூஸிலாந்தில் சமூக – அரசியல் செயற்பாட்டாளராக இயங்கிவந்துள்ளார். நியூசிலாந்து பிரதமர் ஜஸிந்தா ஆர்டனை ஆதர்ஷமான அரசியல் தலைவராகப் பின்பற்றி, அவரை ஒரு தடவை சந்தித்துமுள்ளார்.
இதற்கிடையில், அப்ஸராவுக்கும் அவரது கணவருக்கும் இடையிலான உறவு நீடிக்கவில்லை என்றும் இருவருக்கும் இடையில் திருமணமாகி விரைவிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இலங்கை அரசுக்கு எதிராக இலங்கையில் மாத்திரமல்லாது உலகெங்குமுள்ள இலங்கைமக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, நியூஸிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் அப்ஸரா முன்னின்று செயற்பட்டிருக்கிறார். அதன்பின்னர், இலங்கைக்கு சென்று அங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் ஆர்வத்துடன் கடந்த 22 ஆம் திகதி கொழும்பு சென்றுள்ளார்.
நியூஸிலாந்திலிருக்கும்போது அப்ஸராவுக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் இடையில் தொலைபேசியில் இடம்பெற்ற கருத்துவேறுபாட்டின்போது, அப்ஸராவுக்கு அவரது முன்னாள் கணவர் எச்சரிக்கை விடுத்தார்.
அப்ஸரா நாடு திரும்பி ஓரிரு நாட்களில் அவரையும் அவரது சகோதரி மற்றும் நண்பி ஆகியோரை ஒன்றாக சந்தித்த, அப்ஸராவின் முன்னாள் கணவர், தங்களது கருத்து முரண்டுபாடுகளுக்கு ஒரு முடிவு கட்டுவதென்று தீர்மானித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் அப்ஸராவின் கழுத்தைக் கூரிய கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, அவரது சகோதரி மற்றும் நண்பி ஆகியோரின் மீது தாக்குதல் நடத்திவிட்டு, தனது கழுத்தை வெட்டிக்கொண்டு அருகிலிருந்த கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அப்ஸராவின் சடலத்தை மீட்டுள்ளார்கள். காயமடைந்தவர்களையும் கிணற்றில் கிடந்த அப்ஸராவின் முன்னாள் கணவரையும் ராகம வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்கள்.
அப்ஸராவின் மரணத்துக்கு அவர் கல்வி கற்றுக்கொண்டிருந்த நியூஸிலாந்து பல்கலைக்கழகம் கவலை வெளியிட்டுள்ளது. பொலிஸார் விசாரைணகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

