மேற்கு ஆசியப் பதற்றம் ; இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் அமைதிக்கான முயற்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்கு ஆசிய நாடுகளில் இலங்கை நாட்டவர்களும் உட்பட பெருமளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் வசித்து வருவதால், அவர்களின் பாதுகாப்பும் நலனும் இலங்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள், முக்கிய குடிமக்கள் உள்கட்டமைப்புகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது அவசியம் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து தரப்பினரும் அதிகபட்ச பொறுமையுடன் நடந்து கொள்ளவும், பதற்றத்தை குறைக்கும் வகையில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கும், சர்வதேச வர்த்தகத்திற்கு உகந்த சூழலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கும் இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.