நாளை தொடர்பான வானிலை முன்னறிவிப்பு
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை (29) தொடர்பான வானிலை முன்னறிவிப்பை வெளியிடுகையில் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இது நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வடமேற்கு நோக்கி மிக மெதுவாக நகர்ந்து மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.
தாக்கம் படிப்படியாகக் குறையும்
நாளைய தினத்திற்கு பிறகு வானிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதோடு நாளைய தினம் நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வட மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். மாலை அல்லது இரவு வேளையில் மற்ற பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இந்நிலையில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.