விபத்தில் சிக்கிய ஆயுத லொறி!
குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிலும் புதிய அதிகாரிகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்குவதற்கான ஆயுதங்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.
குறித்த லொறி , கண்டி - மஹியங்கனை வீதியின் 18ஆவது கொண்டை ஊசி வளைவின் 11ஆவது வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (12) லொறி விபத்துக்குள்ளான போது அதில், உதவி பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 4 பேர் பயணித்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள்
லொறியில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான ரி56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் என்பன கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய பொலிஸ் அதிகாரிகளின் பயிற்சிக்காக மஹியங்கனை, வெடி தலாவ பகுதியில் இருந்து ஆயுதங்களை கொண்டு சென்ற லொறியே விபத்தில் சிக்கியதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் விபத்தில் காயமடைந்த உதவி பொலிஸ் பரிசோதகர் சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.