நாமல் ராஜபக்சவுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்காமல் ஓயமாட்டோம்!
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவரை குற்றமற்றவராக விடுதலை செய்வதற்கு சட்டத்தரணிகள் குழுவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என சட்டத்தரணி நிசாந்த தயாநந்த தெரிவித்துள்ளார்.
நாமலுக்கு பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்ய எம்மால் முடியும்
நிச்சயமாக இந்த அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்ய எம்மால் முடியும் என்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது.
நாமல் ராஜபக்ச 50 க்கும் மேற்பட்ட நாட்கள் விளக்கமறியலில் இருந்த நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்தில் கிரிஷ் வழக்கு மற்றும் இலஞ்ச வழக்குக்காக பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 50 இலட்சம் ரூபாவைக் கொண்ட மூன்று சரீரப் பிணைகளுடனும் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையுடனும் பிணை வழங்கப்பட்டுள்ளது. அது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த வெற்றி ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்சவுக்குக் கிடைக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். நாங்கள் மிகவும் பொறுப்புடன் இது தொடர்பில் ஒரு அறிக்கையை விடுக்கிறோம்.
இன்றைய சந்தர்ப்பத்தில் எங்களுக்கு பிணை மாத்திரமே கிடைத்துள்ளது. ஆனால் இந்த வழக்குகளில் உள்ள விடயங்களின்படி எதிர்காலத்தில் நிச்சயமாக நாமலுக்கு விடுதலைக் கிடைக்கும்.