இலங்கையின் கண்களில் பார்வையை இழந்தோம்; பாகிஸ்தான் மருத்துவர் உருக்கம்!
இலங்கை எங்களுக்கு கண்களைத் தானமாக வழங்கியது, ஆனால் நாங்கள் பார்வையை இழந்துவிட்டோம் என, பாகிஸ்தானில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இலங்கைய குறித்து பாகிஸ்தானின் முன்னணி கண் மருத்துவர் நியாஸ் ப்ரோஹி வருத்தம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் 1967 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 35,000 விழிவெண்படலங்களை பெற்றுள்ள பாகிஸ்தான், இலங்கையிடமிருந்து கண் தானம் பெறுவதில் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவதனவை ஒரு குழுஅடித்துக் கொலை செய்த நாள் முதல், நாட்டில் உள்ள பலரைப் போலவே தானும் துயரத்தில் ஆழ்ந்திருப்பதாக பாகிஸ்தான் - இலங்கை கண் தான சங்கத்தின் உறுப்பினரான டொக்டர் ப்ரோஹி மனவருத்தத்துடன் கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இரங்கல் தெரிவிக்கும் வகையில் இலங்கை கண் தான சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ள அவர்,
"நாங்கள் வெட்கத்தால் தலை குனிகிறோம், நாம் பார்வையை இழந்து விட்டோம் " என்றும் தெரிவித்துள்ளார். கராச்சியில் உள்ள பிரபல ஸ்பென்சர் கண் வைத்தியசாலையின் முன்னாள் தலைவரான ப்ரோஹி, இதுவரை பல கண் அறுவைசிகிச்சைகளைச் செய்துள்ளார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், உலகின் பல்வேறு நாடுகளுக்கு இலங்கை 83,200 விழிவெண்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் இலங்கையின் நன்கொடைகளில் 40 சதவீதம் பாகிஸ்தான் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதேவ ளை இலங்கையில் இருந்து அதிக அளவில் பாகிஸ்தான் தானம் பெறுகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பாகிஸ்தானின் ஸ்பென்சர் கண் வைத்தியசாலையில் டொக்டர் எம்.எச்.ரிஸ்வியால் மேற்கொள்ளப்பட்ட முதல் கண் அறுவை சிகிச்சை இலங்கையால் தானமாக வழங்கப்பட்ட விழிவெண்படலத்தைக் கொண்டே செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தானின் முன்னணி கண் மருத்துவர் நியாஸ் ப்ரோஹி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்தி