நாங்கள் யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்ல தயார் இல்லை ; இராதாகிருஷ்ணன்
மலையகம் எமது தாயகம். நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. அதனால் மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்குதேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும்..
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
மேலும் வரவு செலவு திட்ட விவாதத்தின்போது, மலையக மக்களுக்கு தனியான வீடு நிர்மாணித்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் தெரிவித்து வந்தார்கள். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
அதேபோன்று மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும் தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி இந்த காணிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.
எமது காலத்தில் அதனை மேற்கொள்ள நாங்கள் முயற்சித்தோம். அது சாத்தியமாகவில்லை. அதனால் அதனை தற்போது நீங்களாவது செய்யுங்கள்.
அந்த மக்களும் இந்த நாட்டு பிரஜைகள் என அரசாங்கத்தில் இருக்கும் 159பேரும் பேசி இருக்கிறார்கள்.அதனால் அந்த மக்களுக்கு காணிகளை பிரித்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இல்லாவிட்டால், இந்த சமூகம் ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும். அதேநேரம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களைவிட வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றன. அவர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.