குடிநீர் நிறுவனம் என்ற போர்வையில் இயங்கிய இரகசிய மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
கொழும்பு கடுவலை பகுதியில் பதிவு செய்யப்பட்ட குடிநீர் விநியோக நிறுவனம் என்ற போர்வையில் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.
இந்தச் சோதனையில் 18,500-க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களும், கஞ்சா போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அங்கு இருந்த ஆறு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை (27) கடுவலை சுதர்ஷன வீதியில் அமைந்துள்ள சொகுசு வளாகம் ஒன்றில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வெளிப்பார்வைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்களைத் தயாரித்து விநியோகிக்கும் நிறுவனம் போல காட்சியளித்த அந்த வளாகத்திற்குள், சட்டவிரோதமான முறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு வந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சோதனையின் போது, தலா 180 மில்லி லீற்றர் அளவுடைய 18,575 உள்நாட்டு மதுபான போத்தல்கள், மொத்தமாக 3,345.5 லீற்றர் மதுபானம், வெளிநாட்டு மதுபான லேபிள்கள் ஒட்டப்பட்ட ஒரு லீற்றர் அளவுடைய நான்கு போத்தல்கள் மற்றும் 750 மில்லி லீற்றர் அளவுடைய ஒரு போத்தல் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் போதைப்பொருட்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.