நீரினால் காத்திருக்கும் ஆபத்து ; இலங்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ள நீர் வடிந்தோடத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் சிரேஷ்ட ஆலோசகர் மருத்துவ நிபுணர் ஒருவர் வெள்ளப்பெருக்கின் பின்னர் நீர்நிலைகள் மாசுபடுவதன் காரணமாக டெங்கு, எலிக்காய்ச்சல் , மஞ்சள்காமாலை, மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நோய் அபாயம்
"மழைக்காலத்தின் ஆரம்பமானது பல தீவிரமான நோய்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இக்காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒரு முக்கிய அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றது" என அவர் தெரிவித்துள்ளார்.
சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில்கூட, பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ள நீர் மாசுபடக்கூடும் என்பதால், எலிக்காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பருவமழைக் காலத்தில் குடிநீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான குடிநீர், சேற்று நீரில் நடப்பதைத் தவிர்க்குமாறும், கொதிக்கவைத்து ஆறவைக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பருகுமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.