கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தல, வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வீதமும், நான்கு வான் கதவுகள் ஆறு அங்குல வீதமும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரவீந்திர குமார தெரிவித்தார்.

எச்சரிக்கை
நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக மாணிக்க கங்கையின் நீர்மட்டம் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதால், கதிர்காமத்திற்கு வரும் பக்தர்கள் அவதானத்துடன் இருக்குமாறு மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மாணிக்க கங்கையின் இரு கரையோரங்களிலும் உள்ள மக்கள் மற்றும் கதிர்காமம், செல்லக்கதிர்காமம் புனித பூமிகளில் உள்ள பக்தர்கள் மாணிக்க கங்கையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.
இதேவேளை, வெள்ளவாய அலிகொட்ட ஆர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் வெல்லவாய - வேவல்கதுர வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையுடன் அலிகொட்ட ஆர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்ததால் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து, வெல்லவாய - வேவல்கதுர வீதி நீரில் மூழ்கியுள்ளது.