அடுத்துவரும் 36 மணித்தியாலங்களின் வானிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்வு கூறப்பட்டது.

இந்த நிலையில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய மலை நாட்டின் மேற்குப் பகுதிகளிலும் மேல், சபரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடைக்கிடையே 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.