ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மோசடி தொடர்பில் எச்சரிக்கை!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி தொலைபேசி செயலிகள் தொடர்பில்,ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தியோகபூர்வமற்ற இணையத்தளங்கள், சமூக ஊடக இணைப்புகள், செய்திப் பரிமாற்றத் தளங்கள் மற்றும்மூன்றாம் தரப்பு செயலி அங்காடிகள் ஊடாக தொலைபேசி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட்ஸ்அப், குறுஞ்செய்தி (SMS), மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகங்கள் வழியாகப் பகிரப்படும் இணைப்புகள் மூலம் தனது செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு வாடிக்கையாளர்களிடம் ஒருபோதும் கோருவதில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒருமுறை கடவுச்சொற்கள் (OTP), வங்கி அடையாள எண்கள் (PIN), கடன் அட்டை விவரங்கள் உள்ளிட்ட நிதித் தகவல்களையும் நிறுவனம் கோருவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் வெளியீட்டாளராக SriLankan Airlines Limited குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து, அதன் உத்தியோகபூர்வ செயலியை மட்டுமே பதிவிறக்கம் செய்யவோ புதுப்பிக்கவோ வேண்டும் எனப் பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், உத்தியோகபூர்வ சலுகைகள், விளம்பரங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் www.srilankan.com, உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் ஊடாகவே கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான செயலிகளை நிறுவவோ, அவற்றில் தனிப்பட்ட அல்லது கட்டணத் தகவல்களைப் பகிரவோ வேண்டாம் எனவும், அவ்வாறான செயலிகள் தொடர்பில் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தகவல் தொடர்பு வழிகள் மூலம் முறைப்பாடு செய்யுமாறும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவுறுத்தியுள்ளது.