கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்போருக்கு எச்சரிக்கை : போலி வங்கிக் கணக்குகள் மூலம் மோசடி
கொரிய மொழிப் பரீட்சை தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பெயரைப் பயன்படுத்தி, போலி குறுஞ்செய்திகளை அனுப்பி பணமோசடி செய்யும் நடவடிக்கை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
அதனால் கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி
அந்த குறுஞ்செய்தியில் போலி வங்கிக் கணக்கு இலக்கமொன்று குறிப்பிடப்பட்டு, அதற்குப் பணத்தை வைப்புச் செய்யுமாறு கொரிய மொழிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது.
இது முற்றிலும் ஒரு மோசடி செயலாகும். 2026ஆம் ஆண்டுக்கான கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஊடாக 2026.10.26 முதல் 2026.10.30 வரை இணையவழி முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பணியகத்தின் பெயரிலுள்ள மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகிய வங்கிக் கணக்கு இலக்கங்களுக்கு மாத்திரம் பணத்தைச் செலுத்துமாறு புலம்பெயர் தொழிலாளர்களிடம் பணியகம் கேட்டுக்கொள்கிறது:
பரீட்சைக்கான கட்டணம் செலுத்துமாறு வரும் குறுஞ்செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, பணியகத்தின் துரித அழைப்பு இலக்கமான 1989 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு பணியகம் அறிவுறுத்துகிறது.
உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே குறித்த வங்கிக் கணக்குகளுக்கு பணத்தைச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் அடிக்கடி இடம்பெறுவதால், கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் எனப் பணியகம் கேட்டுக்கொள்கிறது.