மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த போர்; அமெரிக்கா எச்சரிக்கையை மீறி தாக்குதல்;பரபரப்பில் உலகம்
லெபனான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறுவதாகக் குற்றம் சாட்டி, நேற்றிரவு ஈரான் வடக்கு இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியிருந்தது.
இதற்குப் பதிலடியாக, மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள முக்கிய இராணுவ இலக்குகள் மீது தாம் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கையை மீறி தாக்குதல்
ஈரானின் தலைநகரான தெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள இஸ்ஃபஹான் ஆகிய நகரங்களில் நள்ளிரவில் பயங்கர வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இஸ்பஹான் நகரில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், பதற்றம் காரணமாகத் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, ஈரான் மீது உடனடியாக எவ்விதப் பதில் தாக்குதல்களையும் நடத்த வேண்டாம் என இஸ்ரேல் பிரதமரிடம் அமெரிக்க ஜனாதிபதி நேரடியாகக் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், அமெரிக்காவின் கோரிக்கையையும் மீறி இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.