அவுஸ்திரேலியா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்; பலருக்கு கலக்கம்...மனைவி பிள்ளைகளுக்கும் மறுப்பு
அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களது வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்து வருவதைத் தடை செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், தற்காலிக வீசாக்களில் உள்ளவர்கள் பிற வீசாக்களுக்கு மாறுவதற்கான விதிமுறைகளையும் அரசாங்கம் கடுமையாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்
தற்போது ஆண்டுக்குச் சுமார் 3 இலட்சமாக உள்ள நிகர வெளிநாட்டுப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 2028 ஆம் ஆண்டிற்குள் 2 இலட்சத்து 25 ஆயிரமாகக் குறைக்க அவுஸ்திரேலிய உள்நாட்டு அமைச்சர் டோனி பர்க் திட்டமிட்டுள்ளார்.
தற்போது வெளிநாட்டு மாணவர்களின் வாழ்க்கைத்துணை அவுஸ்திரேலியாவில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய விதிமுறைகள் மூலம் இந்தச் சலுகைகள் நிறுத்தப்படவுள்ளன.
2023 இல் 518,000 ஆக உச்சத்திலிருந்த நிகரப் புலம்பெயர்வு, 2024 இல் 429,000 ஆகக் குறைந்து, 2025 ஜூன் 30 உடன் முடிந்த நிதியாண்டில் 306,000 ஆகப் பதிவாகியுள்ளது.
இதில் பாதியளவினர் வெளிநாட்டு மாணவர்களாவர். வலதுசாரி சார்புடைய 'ஒன் நேஷன்' கட்சி, தற்காலிகப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 750,000 ஆகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு அதிகரித்த புலம்பெயர்வோரால் நாட்டின் வீடமைப்புத் துறை, உட்கட்டமைப்பு மற்றும் சமூக அமைப்பில் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இன்றைய தினம் தேசிய ஊடக மையத்தில் உரையாற்றவுள்ள உள்நாட்டு அமைச்சர் டோனி பர்க், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.