தெனியாய மாணவர்களிடையே பரவும் வைரஸ் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே ஒரு வகை வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில் அது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் எச்ஸ்ரீகை விடுத்துள்ளனர்.
இந்த வைரஸ் பிரதானமாக அசுத்தமான கைகள், உணவு அல்லது நீர் ஆகியவற்றின் மூலமும், சுவாசத் துளிகள் மற்றும் வைரஸ் படிந்துள்ள மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலமும் பரவக்கூடும் என சிறுவர் நல விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் மகேஷக விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கைகளைக் கழுவுவதே அதிக பலனைத் தரும்
தெனியாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடம் கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி,வாந்தி,வெளிச்சத்தைப் பார்க்க இயலாமை (Photophobia) மற்றும் சத்தங்களைக் கேட்கும்போது ஏற்படும் அசௌகரியம்,கழுத்து விறைப்பு ஆகிய அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இந்நோயைக் கட்டுப்படுத்த 'கை சுகாதாரம்' மிக முக்கியமான காரணியாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க சவர்க்காரம் இட்டு முறையாகக் கைகளைக் கழுவுவதே அதிக பலனைத் தரும். துண்டுகள், உணவுப் பாத்திரங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்டப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
நோய் அறிகுறிகள் தென்படும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கோ அல்லது ஏனைய பொது இடங்களுக்கோ அனுப்பாது வீட்டிலேயே வைத்திருப்பதுடன், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் குணமடைந்த பின்னரும் பல வாரங்களுக்கு அவர்களின் சுவாசச் சுரப்புகள் மற்றும் மலம் வழியாக வைரஸை வெளியேற்றக்கூடும் என்பதால், நீண்ட காலத்திற்கு சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமெனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.