கோட்டா இல்லம் முன்பாக இடம்பெற்ற வன்முறை; தொடர் விசாரணை
நாட்டில் 2022ஆம் இடம்பெற்ற மக்கள் புரட்சியின்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்துக்கு அருகே நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (30) உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது.
சம்பவத்தில் காயமடைந்ததாகக் கூறி தனபாலசிங்கம் சுபாகரன் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள்கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டவாதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வன்முறைச் சம்பவம் தொடர்பாக 54 சந்தேக நபர்கள் அடையாளம்
நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த அரச சட்டவாதி, இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 54 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மனுதாரரும் ஒரு சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அரச சட்டவாதி அந்த விசாரணைகள் தொடர்பான சில கோப்புகளை சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பொலிஸ் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தனக்குத் தெரிவிக்க ஒரு திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
இதன்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹெர்மிசா டீகல், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த மனுவை செப்டெம்பர் 25 அன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்ட மூன்று நீதியரசர்களை கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, அன்றைய தினம் சம்பந்தப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்துக்குத் தெரிவிக்குமாறு அரசுத் தரப்பு சட்டவாதிக்கு உத்தரவிட்டது