யாழ் பிரபல பாடசாலையில் நடக்கும் வன்முறைகள்; மூடிமறைக்கப்படும் ரகசியங்கள்!
யாழ்ப்பாணம் வலி தெற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள சைவமும் தமிழும் தழைத்தோங்கும் குப்பிழான் கிராமத்தில் அமைந்துள்ள யா/ குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்.
குப்பிளான் கிராமத்தில் உள்ள ஒரே ஒரு பாடசாலை இது ஆகும். இந்த பாடசலையில் ஆரம்பபிரிவு முதல் கா.பொ. த சாதாரண தரம் மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர்.
மாணவர்கள் மீது தாக்குதல்
இப் பாடசாலையில் படித்த பழையமாணவர்கள் உள்ளிட்ட பிள்ளைகள் பலர் பல்வேறு துறைகளிலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமக்கான ஆளுமையில் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் பலரும் விசனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அதாவது இப்பாடசாலையில் உதவியாளரான ஆசிரியர் ஒருவர் தரம் 4 மாணவிகள் மீது தாக்கியதில் இரண்டு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் நான்கு வகுப்பில் 15 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
வகுப்பு ஆசிரியர் 5 மாணவர்களை மாத்திரம் கற்பித்து கொண்டு ஏனைய 10 மாணவர்களை கற்பிப்பதற்கு க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடைந்த 20 வயதான யுவதி ஒருவரை 10000 ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தியுள்ளார். மாணவிகள் இருவர் பரீட்சையில் குறைவான புள்ளி எடுத்ததன் காரணமாக குறித்த பெண் மாணவர்களை தடியால் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரும் அதிபருடன் முரண்பட்துடன், பாதிக்கப்பட்ட மாணவியின்பெற்றோர் தனது முகநூலில் பிள்ளையின் நிலையினை புகைப்படம் எடுத்து பதிவேற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாது வகுப்பு ஆசிரியர் தனது வீட்டில் தான் எடுக்கும் பிரத்யேக வகுப்புக்களுக்கு பிள்ளைகள் செல்லவில்லை என கூறியும் அடித்துள்ளதாக தெரியவருகின்றது.
இப்பாடசாலையில் கல்விகற்றுவரும் மாணவர்கள் பலர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் . இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி அங்குள்ள படித்த இளைஞர்கள் சிலர் இலவசமாக பிரத்யேக வகுப்புக்களை மாணவர்களுக்கு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த வகுப்புக்களுக்கு செல்லக்கூடாது என , சம்பந்தப்பட்ட ஆசியை மற்றும் அதிபர் பிள்ளைகளை மிரட்டி வைத்துள்ளதாகவும், மீறி செல்லும் மாணவர்களை தண்டிப்பதாகவும் தெரியவருகின்றது.
மூடிமறைக்க முயன்ற வலய கல்விப்பணிப்பாளர்
இது இவ்வாறிருக்க, பிள்ளையளுக்கு அடி விழுந்ததை முதலில் பிள்ளையள் தங்களுக்குள்ள அடிபட்டதை இப்பிடி மாத்திச் சொல்லுகினம்" என வலயக் கல்விப்பணிப்பாளரே அப்படி ஒரு விடயம் நடக்கவில்லை என கூறியிருந்தமை பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.. இதனையடுத்து பிள்ளையளின் பெற்றோர் பிரதேச செயலகத்திற்கு சென்று சிறுவர் உத்தியோகத்தரிடமும் புகார் அளித்ததாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த சிறுவர் உத்தியோகத்தர் பாடசாலைக்கு சென்று அதிபரையும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தி அறிக்கையை எழுதி சென்றதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளிடமோ , அல்லது அவர்களின் பெற்றோர்களிடமோ நடந்ததை அறிய முற்படவிலை எனவும் கூறப்படுகின்றது. அதோடு பிள்ளைகளின் வீடு சென்று விசாரிக்கவில்லையா என கேட்டவர்களிற்கு அவர்களின் விலாசம் தெரியாது என அசட்டையாக சிறுவர் உத்தியோகத்தர் பதில் கூறியதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் யா/ குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலத்திற்கு , வெளிநாடுவாழ் புலம்பெயர் ஊரவர்களும் பழைய மாணவர்கள் பலரும் நிதி உதவி அளித்துவரும் நிலையில் , மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தை அவர்கள் கண்டுகொள்ளாமலிருப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்த குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் , தற்போது மாணவர் சேர்க்கை குறைந்தளவில் காணப்படுவதாக பலரும் வேதனை வெளியிட்டுவரும் நிலையில் , இவ்வாறான மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவங்கள் பாடசாலையின் இருப்பை கேள்விக்குறியாக்கும் என பாடசாலையின் முன்னாள் அதிபர் மற்றும் ஆரியர்கள் சிலரும் வேதனை வெளியிட்டுள்ளனர்.