இலங்கையில் ஒற்றை யானையின் உயிரை காக்க போராடும் ஊரவர்கள்
"கண்டலமே ஹெடகாரயா" என்று அழைக்கப்படும் காட்டு யானையின் முன்னங்கால் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதன் காரணமாக அது பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, வனவிலங்கு அதிகாரிகள் பல மாதங்களாக இந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன்படி, குறித்த காட்டு யானைக்கு உணவளிக்க வேண்டாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு காயம்
இருப்பினும், துப்பாக்கிச் சூட்டு காயத்தின் காரணமாக, காட்டு யானை காட்டுக்குள் சுற்றித் திரிவதில்லை என்றும், கண்டலம ஏரியைச் சுற்றி மட்டுமே காணப்படுவதாகவும், எனவே யானைக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி, அப்பகுதியைச் சேர்ந்த பலர் யானை இருக்கும் இடத்திற்கு தங்களால் இயன்றளவு உணவைக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இதேவேளை, யானையின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சுற்றாடல் அமைச்சரும் பிரதி அமைச்சரும் காட்டு யானையின் உடல்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காட்டு யானையின் உயிரைக் காப்பாற்ற வனவிலங்கு அதிகாரிகள் பல்வேறு சிகிச்சைகளை செயற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.