மீண்டும் கரூர்க்கு செல்லும் விஜய் ; த.வெ.க.வின் அடுத்த திட்டம் என்ன?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்தியாவை உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் ஆறுதல் கூறாமல் இருந்து வந்தார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் விஜய் மீது கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன.
கரூர் செல்ல முடிவு
இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை 'வீடியோ அழைப்பு' மூலம் தொடர்பு கொண்டு நேற்று முன்தினமும், நேற்றும் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது, இது ஈடு செய்ய முடியாத இழப்பு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக்கழகம் செய்து தரும். நான் விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன் என கூறினார்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் கரூர் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நேரில் ஆறுதல் கூற த.வெ.க. தலைவர் விஜய் செல்ல உள்ளார்.
கரூர் செல்வதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க.வினர் இன்று மனு அளிக்க உள்ளதாக கட்சியின் கொ.ப.செ. அருண்ராஜ் தகவல் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே நேற்று மின்னஞ்சல் மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.