முதலமைச்சர் விஜயால் பிரபலமான உணவகம்; குவியும் சுற்றுலா பயணிகள்!
முதலமைச்சர் விஜய் நடிப்பில் 2023ஆம் ஆண்டு வெளியான ‘லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள், காஷ்மீரில் உள்ள வீதியோர உணவகம் ஒன்றின் மீது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காஷ்மீரின் கேன்பால் – பஹல்காம் வீதியில் அமைந்துள்ள ‘சிஃபார்’ (Sifar) என்ற உணவகத்தில் ‘லியோ’ திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் வருகை
திரைப்படத்தில் முதலமைச்சர் விஜய் உணவக உரிமையாளராக நடித்திருந்த நிலையில், திரைப்படம் வெளியான பின்னர் குறித்த உணவகத்துக்கு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிகளவில் வருகை தருவதாக கூறப்படுகிறது.
உணவகத்துக்குச் செல்லும் ரசிகர்கள், திரைப்படத்தில் முதலமைச்சர் விஜய் சாப்பிட்டதாகக் காட்டப்பட்ட உணவுகளை ஆர்டர் செய்து, திரைப்படக் காட்சிகளைப் போன்றே புகைப்படங்களையும் எடுத்துக்கொள்கின்றனர்.
இதனால் ‘சிஃபார்’ உணவகம் ‘லியோ’ திரைப்பட ரசிகர்களின் புகைப்படம் எடுக்கும் இடங்களில் ஒன்றாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பின்போது முதலமைச்சர் விஜய் மிகவும் எளிமையாகப் பழகியதாகவும், திரைப்படம் வெளியான பின்னரே அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் வருகையும் குறித்து தங்களுக்கு தெரியவந்ததாகவும் உணவகத்தின் மேலாளர் சப்சார் அகமத் லோன் தெரிவித்துள்ளார்.
குறித்த உணவகம் தற்போது காஷ்மீரில் முதலமைச்சர் விஜய் ரசிகர்கள் கவனம் செலுத்தும் சுற்றுலா இடங்களில் ஒன்றாக மாறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.