வேப்பம் பூவில் வியக்க வைக்கும் இத்தனை மருத்துவ குணங்களா?
மருத்துவ குணங்களை அதிக அளவில் கொண்டுள்ளது வேப்பம் மரம். அதில் குறிப்பாக வேப்பம் பூவில் எத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றன தெரியுமா? வேப்பம் பூவின் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
ஜீரணத்தை அதிகரிக்கும்
வேப்பம்பூவை சுத்தம் செய்து கல் உப்பு சேர்த்த மோரில் ஊறவிட்டு பிறகு எடுத்து வெயிலில் காயவைத்தும் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இந்த வற்றலை குழம்பில் சேர்த்து சாப்பிடலாம். இதை வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதை பருப்பு பொடி கலந்த சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். வேப்பம்பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. எனவேதான், வேப்பம்பூ ரசம் வைத்து சாப்பிட கொடுக்கின்றனர்.
தலைவலி, காது வலி நீங்கும்
கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வயிற்றுக் கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் வாயுக்களால் அவதிப்படுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்துக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பசியின்மையை போக்கும்
வேப்பம்பூ கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை கட்டுப்படுத்தும். குடலில் தங்கி உள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவற்றுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை தரும்
வேப்பம்பூவை வெயிலில் காயவைத்து பொடி செய்து பருப்பு பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும். வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கு வேப்பம்பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும். வேப்பம்பூவை வதக்கி அதனுடன் புளி, சீரகம், மிளகு சேர்த்து ரசம் வைத்து சாதத்துடன் சேர்த்து அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.