அமெரிக்காவின் பிடியில் வெனிசுவேலா எண்ணெய் வளம்
வெனிசுவேலாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக, கரீபியன் கடலில் ஆறாவது எண்ணெய் கொள்கலன் கப்பலை அமெரிக்க இராணுவம் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது.
'வெரோனிகா' எனப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள "தடை உத்தரவை" மீறிச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அமெரிக்க கடற்படையினர் மற்றும் வீரர்கள் எந்தவித மோதலுமின்றி கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

"வெனிசுவேலாவிலிருந்து முறையாகவும், சட்டபூர்வமாகவும் ஒருங்கிணைக்கப்படும் எண்ணெய் மட்டுமே இனி வெளியேற அனுமதிக்கப்படும்" என்று அமெரிக்காவின் சதர்ன் கமாண்ட் சமூக வலைத்தளத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கயானா நாட்டின் கொடியுடன் பயணித்த வெரோனிகா கப்பல், முன்பு ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இது போன்ற 1,000க்கும் மேற்பட்ட "நிழல் கப்பல்கள்" தடை செய்யப்பட்ட எண்ணெய்யைக் கடத்துவதாக அமெரிக்கா கருதுகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பரந்து விரிந்த எண்ணெய் வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, 500 மில்லியன் டொலர் மதிப்பிலான வெனிசுவேலா எண்ணெய்யை அமெரிக்கா முதல் முறையாக விற்பனை செய்து முடித்துள்ளது.