கான்ஸ்டபிளை தாக்கி தப்பியோடிய வேலே சுதாவின் சகோதரர் கைது
போதைப்பொருள் சுற்றவளைப்பு நடவடிக்கையின் போது கான்ஸ்டபிள் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் சுனிமல் குமார அல்லது "தாஜு" என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று (17) இராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ள "வேலே சுதா" எனப்படும் சமந்த குமாரவின் சகோதரரே இவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கான்ஸ்டபிள் மீது தாக்குதல்
கல்கிஸை பொலிஸாருடன் இணைக்கப்பட்ட படோவிட்ட பொலிஸ் சோதனைத் சாவடியைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று நேற்று (16) பிற்பகல் படோவிட்ட 3ஆம் கட்ட பகுதியில் விசேட போதைப்பொருள் சோதனையை மேற்கொண்டனர். சோதனையின் போது ஒருவர் போதைப்பொருள் கடத்துவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் ஒரு கான்ஸ்டபிளும் சந்தேக நபரைக் கைது செய்யச் சென்றிருந்தனர்.
குறித்த பகுதியில் உள்ள ஒரு வீதியின் அருகே நின்று கொண்டிருந்த சந்தேக நபரை சோதனை செய்தபோது, அவரிடம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதோடு, பொலிஸார் அவரைக் கைது செய்ய முயன்றனர்.
கைது செய்ய முற்படும் போது சந்தேக நபர் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டார், அப்போது அவர் கூர்மையான ஆயுதத்தால் கான்ஸ்டபிளை காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.
தாக்குதலில் தோள்பட்டை மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக கான்ஸ்டபிள் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பிச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.