இலங்கையில் வாகன விலைகளில் அதிரடி மாற்றம் ; மத்திய வங்கியின் அதிர்ச்சி வெளிப்பாடு
வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது வாகனங்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இன்று (26) முற்பகல் மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இந்த ஆண்டின் இறுதியில் நாட்டில் அதிகபட்ச டொலர் கையிருப்பு பதிவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதிவசதியின் கீழான ஐந்தாவது தவணைக் கடன் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி அங்கீகரிக்கப்படும் என நம்பப்படுகின்றது.
அதன்பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிலிருந்தும் டிசம்பர் மாதம் நிதி உதவி கிடைக்கவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வருட இறுதிக்குள் வெளிநாட்டுப் பண அனுப்பல்கள் மற்றும் சுற்றுலா வருமானம் ஆகியவையும் உயரும் என்பதால், உரிய இலக்கை அடைய முடியும் என்றும் அவர் மேலும் விளக்கினார்.