ஐந்து வருடங்களின் பின் இலங்கைக்கு வாகன இறக்குமதி
ஐந்து வருங்களின் பின் இலங்கைக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்த இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் நேற்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
பொருளாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நீண்டகால இறக்குமதித் தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் வாகனத் துறையில் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
புதிய விதிமுறைகளின் கீழ் இறக்குமதி
புதிய விதிமுறைகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் ஒரு SUV மகிழுந்தானது உள்ளூர் சந்தையில் 24.5 மில்லியன் ரூபாயிலிருந்து 26 மில்லியன் ரூபா வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த வாகன இறக்குமதி மீதான தற்காலிக இடைநிறுத்தத்தை, ஜனவரி 31, 2025 திகதியிட்ட 2421/44 என்ற வர்த்தமானி அசாதாரண அறிவிப்பு மூலம் அதிகாரப்பூர்வமாக நீக்கியது.
கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, 2021 ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை நிறுத்தி வைக்க அப்போதைய இலங்கை அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடித்ததால், வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மேலும் தொடர அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கிடையில், ஜூன் 2024 இல், நிதி அமைச்சகம் 2025 ஆம் ஆண்டுக்குள் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கும் திட்டத்தை அறிவித்தது.
பெப்ரவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள், பல்வேறு வகையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றன.
அவையாவன,
- தனிப்பட்ட பயன்பாட்டிற்கான கார்கள் மற்றும் வேன்கள்
- பொது பயணிகள் போக்குவரத்திற்கான பேருந்துகள்
- சரக்கு போக்குவரத்து வாகனங்கள்
- சிறப்பு நோக்க வாகனங்கள்
- முச்சக்கர வண்டிகள், ஈருறுளிகள் மற்றும் பிற இயந்திரம் இல்லாத வாகனங்கள்