நாட்டில் காய்கறிகளின் விலைகள் அதிரடியாக வீழ்ச்சி
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காய்கறிகள் பெருமளவில் வரத் தொடங்கியுள்ள நிலையில், கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 பிரதான வீதியில் அமைந்துள்ள நாவுல நகரில் காய்கறிகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
சந்தைக்கு நாளாந்தம் கிடைக்கும் காய்கறிகளின் அளவு எதிர்பார்த்ததைவிட அதிகரித்துள்ளமையே இந்த விலை வீழ்ச்சிக்கான முக்கியக் காரணம் என அப்பகுதியைச் சேர்ந்த மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, கத்தரிக்காய், வெண்டைக்காய், பயற்றங்காய், பாகற்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், கோவா, லீக்ஸ், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட அன்றாட உணவுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக, பசளி, எளபட்டு, கோஹில மற்றும் பல்வேறு கிழங்கு வகைகளின் விலைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த சில நாட்களாக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்ட காய்கறி விலைகள் தற்போது திடீரெனக் குறைந்துள்ளதால், நாவுல மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் உணவக உரிமையாளர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.
காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, சந்தைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் காய்கறிகளைக் கொள்வனவு செய்து செல்வதையும் அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தைக்கு காய்கறிகளின் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் பொதுமக்களின் அன்றாட உணவுச் செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.