வெடுக்கு நாறிமலை பௌத்த மதத்திற்கு உரியவையாம்!
தமிழர்களின் தொன்மையான வவுனியா நெடுங்கேணி வெடுக்கு நாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை.
அது அமைந்துள்ள பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகை கல்வெட்டுகள்
பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் உள்ள நினைவுச்சின்னங்கள் பௌத்த நினைவுச்சின்னங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகை கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களால் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
இத்தகைய கட்டுமானங்கள் அந்த இடத்தின் தொல்பொருள் நிலப்பரப்பை சேதப்படுத்தியுள்ளன. இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களம் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எவரேனும் இந்த இடத்தில் மத வழிபாடுகளைச் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அவ்வாறு செய்யும்போது தொல்பொருட்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது.
தொல்பொருட்களை அழிப்பது, சிதைப்பது, இடமாற்றுவது அல்லது மாற்றுவது ஆகியவை தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் (Antiquities Ordinance) கீழ் சட்டமீறல்களாகக் கருதப்படும். ஆகவே வெடுக்கு நாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை. விரைவில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.