வவுனியா இளம் தம்பதி கொலை; சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!
வவுனியா - தோணிக்கல் பகுதியில் இளம் தம்பதிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் இன்று (11) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
ஆள் அடையாள அணிவகுப்பு
இந்நிலையில் சந்தேகநபர்களுக்கு இன்று (11) வவுனியா வைத்தியசாலையில் ஆள் அடையாள அணிவகுப்பு திகதியிடப்பட்டிருந்த போதும், சாட்சியின் உடல்நிலை சீர் இல்லாத காரணத்தால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதனால் சாட்சி நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை . இதனையடுத்து சந்தேக நபர்களை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கவும், மீண்டும் 24 ஆம் திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைபடுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் 1 ஆம் சந்தேகநபர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவில்லை.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டத்தரணி ஆஜராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் கவனம் செலுத்துமாறும் , அவர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் மன்றில் தெரிவித்திருந்தார்.