200 அடி கோபுரத்தில் ஏறிய இளைஞன்: வவுனியாவில் நிலவிய பதற்ற நிலை!
200 அடி உயரமான தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் வவுனியா தேக்கவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இளைஞர் ஒருவர் தான் காதலித்த பெண்ணை பதிவு திருமணம் செய்த நிலையில், யுவதியின் பெற்றோர் அவரை கடத்திச் சென்று விட்டதாகவும், காதல் மனைவியை மீட்டுத்தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது,
19 வயதான தேக்கவத்தையை சேர்ந்த உபாலி வீரசேகரகே நிசாந்த வீரசேகர என்ற இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த 18 வயதான சதுஜா என்பவரை காதலித்து பதிவுத்திருமணம் செய்துள்ளார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிலகாலம் வாழ்ந்துள்ளார்.
இதேவேளை கடந்த 21- ஆம் திகதி வியாழக்கிழமை பெண்ணின் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு வந்து பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி அவர்களது வீட்டிற்கு ஏற்றிச் சென்றனர். தன்னை தாக்கிவிட்டு தனது மனைவியை அவர்கள் கடத்திச் சென்றதாக குறித்த இளைஞர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தெரிவித்து குறித்த இளைஞர் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய நிலையில் கூரிய ஆயுதத்தால் தனது கையினையும் அறுந்துகொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்திருந்தனர். எனினும் பொலிஸார் குறித்த விடயத்தில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என கோபுரத்தில் ஏறிய இளைஞரின் உறவினர்கள் பொலிஸாருடன் முரண்பட்டதுடன் நீண்டநேரமாகியும், இளைஞரை மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
தீயணைப்பு துறையினர் காதலியை அழைத்து வருவதாக கூறியதையடுத்து கீழே இறங்கிய இளைஞன், பின்னர் மீண்டும் ஏறிக் கொண்டார். 200 அடி உயரத்தில் அவர் ஏறி நிற்கிறார்.
குறித்த இளைஞனுக்கு துணையாக மைத்துனனும் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிய நிலையில் பின்னர் அவர் கீழே இறக்கப்பட்டுள்ளனர். காதலனை மீட்பதற்காக மற்றும் இரு இளைஞர்கள் கோபுரத்தின் மீது ஏறிய நிலையில் அவர்களது முயற்சியும் பலனிளிக்கவில்லை.
பொலிஸார் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென கூறி, காதலனின் உறவினர்கள் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக ஏ9வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த செய்தி பிரசுரமாகும் நேரத்திலும் வீதி மறிக்கப்பட்டுள்ளது. காதலன் 200 அடி உயரத்தில் இருக்கிறார்.